தலைப்புச் செய்திகள்

சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்கவை நியமிக்க, அரசியலமைப்பு சபை அனுமதி

ட்டமா அதிபராக – சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்கவை நியமிப்பதற்கு தேசிய அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்மாதம் 01ஆம் திகதியன்று, இலங்கையின் பதில் சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமான – சட்டமா அதிபர் பதவிக்கு பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டார்.

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இரண்டு முறை பரிந்துரை செய்திருந்த போதிலும், அவற்றினை அரசியலமைப்பு சபை நிராகரித்தது.

இதனையடுத்து சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அந்த இடத்துக்கு பரிந்த ரணசிங்க பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார்.

பரிந்த ரணசிங்க – உச்ச நீதிமன்றத்தின் 38வது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த கே.ஏ. பரிந்த ரணசிங்கவின் மகனாவார்.