ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

🕔 July 3, 2024

சிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (03) அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிள்ளைகளின் கல்வியில் சகலரும் கவனம் செலுத்துமாறும் நாசகார செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பதவி உயர்வு அல்லது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவருக்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார்.

அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 60 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் 1,706 பட்டதாரிகளுக்கும் 453 ஆங்கில டிப்ளோமா பெற்றவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடையாளமாக சில நியமனங்களை வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில்;

”நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் சேவையில் நுழையும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இன்று நீங்கள் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்கிறீர்கள். கடந்த இரண்டு வருடங்களில் நாடு வங்குரோத்தடைந்த போதும், அந்த வங்குரோத்து நிலையில் இருந்து வெளிவர நடவடிக்கை எடுத்த போதும் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. வெற்றிடங்களுக்காக மாத்திரமன்றி மேலதிகமாகவும் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம். இக்கட்டான காலங்களிலும் நாட்டின் எதிர்காலத்தை மையமாக வைத்து இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நம் எதிர்காலம் நம் குழந்தைகள் தான். அதனால்தான், மாறிவரும் உலகில் புதிய அறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவுடன் எதிர்கால சந்ததியினரைப் பலப்படுத்த அரசு செயல்பட்டு வருகிறது. அது நம் அனைவரின் பொறுப்பாகும்.

எனவே, கௌரவமான தொழிலில் ஈடுபடும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தங்கள் சேவையை அர்ப்பணிக்க வேண்டும். ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது. உங்கள் வகுப்பறையில் 40 – 50 மாணவர்கள் இருக்கலாம். ஆனால் ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு. ராணுவ அதிகாரிகளின் கீழ் பயிற்சி பெற்ற மூத்தவர்கள் உள்ளனர். ஆனால் உங்களிடம் 18 வயதுக்குட்பட்ட நபர்களே உள்ளனர். இதில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். நாட்டின் கல்வியைப் பாதுகாக்காது, கல்வி முறையை சீர்குலைத்தால், நம் எதிர்கால சந்ததியை இழக்க நேரிடும்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, நாம் வேகமாக முன்னேற வேண்டும். 85 பில்லியன் டொலர்களாக இருந்த நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அடுத்த 20 – 25 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 350 பில்லியன் டொலர்களாக உயர்த்த முயற்சிக்க வேண்டும். இது நமது எதிர்கால சந்ததியினருக்காக செய்யப்பட வேண்டும்.

அதற்கிணங்க குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தி அதற்கு முன்னுரிமை கொடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். ஆசிரிய சேவை என்பது மற்ற சேவைகளில் இருந்து வேறுபட்ட சேவை என்றே சொல்ல வேண்டும். அந்த கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

தற்பொழுது பாடசாலைகளின் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டும். பாடசாலைகளில் நடக்கும் வேலை நிறுத்தங்கள் நல்லதல்ல. அப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை. 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவொன்றை வழங்கினோம். நாட்டின் பொருளாதார சூழ்நிலையில், அதற்கு மேல் வழங்க முடியாது. அதன்பிறகு, சில தொழிற்சங்கங்கள் இதை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கோருவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர்களுக்கு இரண்டு சம்பள உயர்வு வழங்கினோம்.

அண்மையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் வகுப்பறைக்கு வரவில்லை. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய மக்களும் வந்து, கூச்சலிட்டு, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வர முயற்சி செய்தனர். வீதித் தடைகளை தள்ளி, கண்ணீர் புகைக்குண்டுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஆனால் கௌரவமான தொழிலுக்கு அது பொருந்தாது.

முன்னைய காலங்களில், ​​ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, ​​வரவுப் பதிவுகளில் கையெழுத்திடாமல் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தினார்கள். சில நாடுகளில் கருப்பு பட்டியுடன் கற்பிக்கின்றனர். ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் முற்றிலும் மாறுபட்டது.

தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் இந்நிலை காணப்படவில்லை. பிள்ளைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை நடத்தினர். அத்துடன் சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் பேணப்பட்டது.

ஆனால் அனைத்து சிங்கள மொழிமூலப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. சாதாரண கிராமங்களைச் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் இந்தப் பாடசாலைகளுக்கே செல்கின்றனர். இதுவா ஆசிரியர் பணியின் பொறுப்பு? என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர்கள் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர். நுவரெலியா போன்ற பிரதேசங்களில் சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் நடைபெறாத போது, தமிழ் மொழிப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தன. இவ்வாறான நிலை நாட்டில் ஏற்படக் கூடாது.

சில பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு பாடசாலைக்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்தனர். அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோன்று அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இது ஒரு நல்ல நிலைமை இல்லை.

முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை யாரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க முடியாது. இது தொடர்பான பரிந்துரையொன்றை வழங்குமாறு நான் சட்டமா அதிபரிடம் தெரிவித்தேன். பாடசாலையை மூடுவதன் மூலமோ, வேலை நிறுத்தம் செய்வதன் மூலமோ பிள்ளைகளின் கல்வியை யாரும் சீர்குலைக்க முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக நாம் அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்

மேலும், ஆசிரியர் இடமாற்றல் முறையை இணையவழி மூலம் செய்யலாமா என்பது குறித்து அமைச்சரிடம் நேற்று கலந்துரையாடினேன். பதவி உயர்வு அல்லது ஆசிரியர்கள் தொடர்பில் யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்க முடியாது. அதேபோன்று, இதற்குப் பின்னர் இவ்விடயம் தொடர்பில் கடுமையாக செயல்பட வேண்டியேற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலருக்கு என் மீது கோபம் ஏற்பலாம். ஆனால் அதுதான் யதார்த்தம். நாம் நமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த நாசகார செயல்களுக்கு துணைபோக வேண்டாம் என எதிர்க்கட்சிகளிடம் முக்கிய வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் மக்களினதும் பெற்றோர்களினதும் குரலுக்கு செவிசாய்த்து செயல்பட வேண்டும். இன்று ஆசிரியர் தொழிலில் பிரவேசித்த உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்