விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம்

🕔 April 21, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (21) இடம்பெற்ற போது – இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது. பின்னர் அந்தத் தடை நீடிக்கப்பட்டது.

பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடம் – துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் பதில் தலைவராக ஏப்ரல் 08 அன்று நியமித்தது.

கடந்த மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை அறிந்திருப்பதாகவும், அவரிடம் விசாரித்தால் அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்தத் தகவல்களை நீதித்துறைக்கு வெளியிடத் தயார் என்றும் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்