மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

🕔 March 4, 2024

மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில்,

  • 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின்சார விலை 33 சதவீதம் குறைக்கப்படும்
  • 31 முதல் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட வகையில் உள்ள நுகர்வோரின் மின் கட்டணத்தில் 28 சதவீதம் குறைக்கப்படும்.
  • 60 முதல் 90 அலகு வரை பாவிக்கும் நுகர்வோருக்கு 30 சதவீதம் மின் கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்
  • 90 முதல் 180 அலகுகளுக்கு 24 சதவீதம் கட்டண குறைப்பு வழங்கப்படும்.
  • 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 சதவீதம் கட்டணக் குறைப்பு கிடைக்கும்.
  • மத வழிபாட்டு இடங்களுக்கு 33 சதவீதம் கட்டணம் குறைப்பு.
  • ஹோட்டல் மற்றும் தொழில் துறைக்கு 18 சதவீதம் கட்டணம் குறைப்பு.
  • பொதுநோக்கங்களுக்கு (general-purpose) பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 23 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும்.
  • பொதுப்பணித்துறைக்கு 22 சதவீதம் மின் கட்டணம் குறைப்பு.
  • தெரு விளக்குகளுக்கு 20 சதவீதம் கட்டணம் குறைப்பு.

மொத்த கட்டணக் குறைப்பு 21.9 சதவீதமாகும்.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 வது பிரிவின் விதிகள் மற்றும் விதிகளுக்கு இணங்க, இந்தக் கட்டணத் திருத்தத்தில் இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவுகள் மற்றும் செலவுத் தரவுகளை ஆய்வு செய்து மீளாய்வு செய்த பின்னர் – இறுதி முடிவு எட்டப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 3.4 வீதத்தாலும், பின்னர் பெப்ரவரி 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட பிரேரணையில் 16 வீதத்தாலும் கட்டணங்களை குறைக்குமாறு முன்மொழிந்திருந்தது.

பொது ஆலோசனை மற்றும் மீளாய்வுகளின் போது தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை கருத்தில் கொண்டு 21.9 வீதத்தால் மின்சார கட்டணத்தை குறைக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்தின்படி, 30 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோரின் மாதாந்த நிலையான கட்டணம் 180 ரூபாயில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்படும். அவர்கள் செலுத்தும் அலகு ஒன்றுக்கான விலை ரூ.12ல் இருந்து ரூ. 08 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகு வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மாதந்தோறும் வசூலிக்கப்பட்ட 360 ரூபாய் 300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை அலகு ஒன்றுக்கான விலை 30 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர கட்டணம் மற்றும் அலகு கட்டணம் குறைக்கப்பட்ட விதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்