தெ.கி.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வு

🕔 March 3, 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வு நேற்று (02) காலை 09.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்த நிழக்வுக்கு – பீடாதிபதி அஷ்ஷெய்ஹ். எம்.எச்.ஏ. முனாஸ் தலைமை தாங்கினார்.

பெண்களின் திருமண வயதெல்லை, ‘வலி’யின் (மணப்பெண்ணின் பொறுப்புதாரர்) தேவைப்பாடு, ‘வலி’யின் ஒப்புதல், திருமணத்துக்கான பெண்ணின் சம்மதம், காழிகளின் தகைமை, பெண்காழிகளின் நியமனம், திருமணப் பதிவு, தாபரிப்பு மற்றும் பலதார மணம் போன்ற முக்கிய விடயப் பரப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், பீடாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ‘இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு குறித்த முஸ்லிம் சமூகத்தின் கருத்துநிலை’ எனும் ஆய்வின் முடிவுகளும் இவ்வமர்வில் முன்வைக்கப்பட்டன.

மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வில் – பல்கலைக்கழக விரிவுரையாளர்களான பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம் மஸாஹிர், பேராசிரியர் கலாநிதி ஆர்.ஏ. சர்ஜூன், கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ், கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி மற்றும் உஸ்தாத் மன்ஸூர், கலாநிதி. ஷாமிலா தாவூத், கலாநிதி ஷிஹான் தாவூத், டாக்டர் வை.எல்.எம்.யூஸூப், எம்.எம்.எம். சாபிர், கலாநிதி எம்.பீ. பௌஸூல், கலாநிதி யூ.எல். அஸ்லம் ஆகியோருடன் சட்ட அறிஞர்களான கலாநிதி ஏ.எல். கபூர், எம்.எச்.எம். றுஸ்தி, எம்.ஏ.சீ.எம். உவைஸ், ஏ.சீ.எப். ஹூஸ்னா, அஷ்ஷெய்ஹ் டீ.எம்.எம். அன்ஸார் மற்றும் ஜெ. றாஷி முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற முஸ்லிம் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள், முஸ்லிம் சமூகத்தலைவர்கள், பெண் ஆர்வாலர்கள், துறைசார் நிபுணர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இதன்போதுபார்வையாளர்கள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வளவாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் ஆவணமாக்கப்பட்டு வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என பீடாதிபதி குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்