தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

🕔 February 29, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டு, நியாயமான காரணமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தரக்குறைவான ‘இம்யூன் குளோபுலின்’ தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஆறு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் – போலியான ஆவணங்களை உருவாக்கி, தரமற்ற 22,500 இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

விசாரணையில் 50 கோடிரூபாய் நிதி மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபாய் மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்