தெ.கி.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை Zoom ஊடாக நடத்த தீர்மானம்

🕔 January 19, 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இம்மாதம் 22ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை – Zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் – இன்று (19) இடம்பெற்ற ஆலோசனைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, 22ஆம் திகதி தொடக்கம் மறு அறிவிவித்தல் வரை, கல்வி நடவடிக்கைகளை Zoom ஊடாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்கலைககழகத்தில் ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய பதில் பதிவாளர் நௌபர், இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலேயே மேற்படி தீர்மானத்துக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்றும் மேலும் தெரிவித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்