தலைப்புச் செய்திகள்

அஸ்வெசும திட்டத்தில் 03 லட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் மேலதிகமாக சேர்ப்பு

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டத்துக்கு 03 லட்சம் மேலதிக குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 6,40,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மீளாய்வு செய்ததன் பின்னர், இந்தக் குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிதியமைச்சில் நலன்புரி நன்மைகள் சபையுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ‘அஸ்வெசும’ திட்டத்தின் மொத்த எண்ணிக்கை தற்போது 1.7 மில்லியன் குடும்பங்களைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் காரணமாக, இதுவரை நிவாரணம் பெற்றுக் கொண்டிருந்த 5,209 குடும்பங்கள் தகுதியற்றவர்களாகவும், மேலும் 2,567 குடும்பங்கள் தாங்கள் பெறும் சலுகைகளின் மட்டத்திலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மொத்தம் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய பதில் நிதியமைச்சர், அந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் அனைத்தையும் விரைவில் பரிசீலித்து முடிக்கப்படும் என்று உறுதியளித்தார்.