பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை

🕔 October 3, 2023

ட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்பாக, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியோரத்தில் கூரை வீழ்ந்து சேதமடைந்துள்ள பஸ் பயணிகள் தரிப்பிடத்தை அவசரமாகப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் கோரிக்கை
விடுக்கின்றனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பலத்த காற்றின் காரணமாக உடைந்து விழுந்தமையினால் இந்த பஸ் தரிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாமலுள்ளது.


எனினும், இதுவரையில் இதனுடன் தொடர்புபட்டோர் – இதனைப் புனரமைக்காமை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில்,குறித்த பயணிகள் தரிப்பிடம் – கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார
சபையின் நிர்வாகத்திற்குரியது என்றும், இது சேதமடைந்துள்ளமை தொடர்பில் அவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் திகதி கடிதம் மூலம் தாம் அறிவித்துள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் தெரிவிக்கின்றார்.

குறித்த பயணிகள் தரிப்பிடத்தை பொதுமக்களுடன் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களும் அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

தற்பொழுது பிராந்தியத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதனால், இதனை உடனடியாக புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments