முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை

🕔 September 8, 2023

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் கண்டி மாவட்டம் – கங்கா இஹல கோரலே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட மேற்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு 75,000 ரூபாய் அபராதத்தினையும் கம்பளை நீதவான் நிதிமன்றம் விதித்துள்ளது.

குறித்த நபர் 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றங்களுக்கு ஆஜராகாமல் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக, அவருக்கு மூன்று பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இவர் சாரதி அனுமதிப் பத்திரம், வாகன வருமான உத்தரவுப் பத்திரம் போன்றவை இன்றியும் 2018இல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக சந்தேக நபரை கைது செய்த பின்னர் போலிசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த நேரத்தில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

ஆனால், சந்தேகநபர் நீதிமன்றங்களைத் தவிர்த்ததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஐந்து வருட காலத்திற்கு வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், சந்தேக நபரிடம் இன்றுவரை செல்லுபடியாகும் உரிமம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு சந்தேகநபருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்