இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 2024 வரை இந்த நீடிப்பு செல்லுபடியாகும்.
ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால், இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் வசதியைக் கொண்டு மார்ச் 2024 வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்என, ட்விட்டரில் நிதி ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய ஸ்டேட் வங்கி, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மார்ச் 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் காலத்தை நீடித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இன்று (மே 30) திருத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.