கோட்டாவுக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடும் அரசு: தகவல் அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை மாதாந்தம் அரசு செலவிடுவதாக உண்மை சரிபார்ப்பு இணையத்தளம் (factseeker.lk) தெரிவிக்கின்றது.
டிசம்பர் மாதம் ராஜபக்ஷவுக்கு ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளர் கொடுப்பனவுகளுக்காக 09 லட்சத்து 91 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டதாக, ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் கூறுகிறது.
மேலும் தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் மற்றும் இதர செலவுகளுக்கு 03 லட்சத்து 38 ஆயிரத்து 387 ரூபா 60 சதம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தும் வாகனங்கள் குறித்த விபரங்களை – ஜனாதிபதி செயலகம் இதுவரை வெளியிடவில்லை.
உண்மை சரிபார்ப்பு இணையத்தளம் ஜனவரி 24 அன்று ஜனாதிபதி செயலகத்திடம் விடுத்த தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைக்கான (ஆர்டிஐ) பதிலில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசு பெருந்தொகையினைச் செலவு செய்வதாக சமூக மற்றும் பிரதான ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகிமையினை அடுத்து, மேற்படி தகவல் அறியும் உரிமைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.