முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

🕔 March 12, 2023

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொள்ளவிருந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடை விதித்ததாகக் கூறப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த வெள்ளிக்கிழமை இரவு தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையததை வந்தடைந்தார். இதன்போது அவருக்கு மத்துகம நீதிமன்றத்தால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி – குடிவரவு – குடியகல்வுஅதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். இருந்தபோதிலும், மத்துகம நீதிமன்றத்தில் தனக்கு எதிராக அவ்வாறான வழக்கு எதுவும் இல்லை என்றும், வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்படவில்லை எனவும் குறித்த அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை குடிவரவு – குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு முன்னாள் அமைச்சர் அறிவித்துள்ளார். இதனையடுத்து தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழையினால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தரவு கட்டமைப்பு முறைமையில் ஏற்பட்டுள்ள பிழையை நிவர்த்தி செய்ததன் பின்னர், வெளிநாட்டுப் பயணத்திற்கான அனுமதி வழங்கப்படும் என முன்னாள் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ள கட்டுப்பாட்டாளர் நாயகம், குறித்த நேரத்தில் பணியில் இருந்த குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிதுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததன் பின்னர் குறித்த தடை நீக்கப்பட்டிருந்தது.

Comments