குளம் போல் காட்சியளிக்கும் வீதிகள்; பிரதேச சபை உறுப்பினர்களின் அலட்சியமே காரணம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் அமீர் குற்றச்சாட்டு

🕔 March 7, 2023

ட்டாளைச்சேனை அல் – முனீரா மற்றும் அரபா வட்டாரங்களின் 6, 8ஆம் பிரிவுகளில் உள்ள அநேகமான வீதிகள் குன்றும் குழியுமாகவும் மழை காலங்களில் நீரில் மூழ்கி குளங்களைப் போன்றும் காட்சியளிப்பதற்கு – பிரதேச சபை உறுப்பினர்களின் அசமந்தப் போக்கே காரணம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும், வேட்பாளருமான ஏ.கே.அமீர் தெரிவித்தார்.

மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அமீர், மக்களைச் சந்திக்கும் பொருட்டு குறித்த பகுதிகளுக்கு சென்ற போது, வீதிகள் இவ்வாறான நிலைமையில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த உதுமாலெப்பை கூட அட்டாளைச்சேனை 6, 8ஆம் பிரிவு வீதிகளை கண்டுகொள்ளவில்லை. அதனாலே அப்பகுதியிலுள்ள பெரும்பாலhன வீதிகள் கிறவலிடப்பட்ட நிலையிலே குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றன.

அட்டாளைச்சேனை 6, 8ஆம் பிரிவுகளில் குன்றும் குழியுமாக காணப்படும் இவ்வீதிகள் மழை காலங்களில் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

குறிப்பாக அப் பிரிவுகளிலுள்ள மக்கள் அந்த வீதிகளினால் பயணம் செய்ய முடியாமல் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், பாடசாலை செல்லும் மாணவர்கள் அந்த வீதியினால் செல்லும் போது – தங்களது பாதணிகளை கைகளிலே கொண்டு செல்ல வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தமது வாக்குகளைப் பெற்று பதவிகளை அடைந்தவர்கள், தமக்கான தேவைகள் எதனையும் பூர்த்தி செய்வதற்குக் கூட முயற்சிக்கவில்லை என, அப்பகுதி மக்கள் தன்னிடம் கவலையுடன் கூறியதாகவும் வேட்பாளர் அமீர் இதன்போது குறிப்பிட்டார்.

“மக்களுடைய பொதுவான தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகவே மக்கள் வாக்களித்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை அனுப்புகின்றனர். மக்களின் வாக்குகளை பெற்று பதவிகளை அடைந்தவர்கள் மக்களின் தேவைகள் அபிலாசைகளை நிறைவேற்ற தவறுகின்றனர்”.

“பிரதேச சபையில் பல கோடி ரூபா பணத்தைசேமித்து வைத்துள்ள தவிசாளரும் உறுப்பினர்களும் – குறித்த வீதிகளை செப்பனிட்டு மக்களின் சீரான போக்குவரத்திற்கு வழிசமைத்து கொடுக்காமை கவலையான விடயமாகும்” என்றும் அவர் கூறினார்.

மக்களுடைய ஆணையினைப் பெற்று மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களையும், வட்டாரம் கடந்து தேர்தலுக்காக இறக்குமதி செய்யட்டவர்களையும் இம்முறை மக்கள் புறக்கனிக்க வேண்டும் எனவும் அமீர் மேலும் தெரிவித்தார்.

Comments