தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

🕔 January 20, 2023

டைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (20) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. 

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்;

“மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு மூன்று சபைகளை நாம் கைப்பற்றினோம். 

மக்களின் அதிகபட்ச ஆதரவில் இந்த வெற்றியை நாம் பெற்றுக்கொண்டோம். நாம் அமைத்த சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேர்மையாகப் பணியாற்றி, மக்களுக்கு இயன்றளவு சேவைகளை செய்துள்ளனர். 

அந்த வகையில், இம்முறை தேர்தலிலும் நாம் அதிக ஆசனங்களையும் சபைகளையும் கைப்பற்றுவதற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம். 

இந்தத் தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ஆளுங்கட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

பல சின்னங்களிலும் போட்டியிடுவது போன்று ஒரு தோற்றப்பாட்டை ஆளுங்கட்சி மேற்கொண்டுள்ள போதும், இந்த தேர்தலை எப்படியாவது பிற்போட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றது. எனினும், ஜனநாயக ரீதியில் இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 

தேர்தல் செலவீனம் தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்று – நேற்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அது தேர்தலை நடத்துவதில் சிக்கலை உருவாக்கும் ஆரம்ப நடவடிக்கையாக இருக்கவும் முடியும்.

எனினும், ஐந்து தினங்களுக்குள் அந்த விடயங்கள் முடிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு இருப்பதனால் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு இருக்கின்றது. ஆகையால், அதனை மீறி தேர்தல் பிற்போடப்பட்டால்  நீதிமன்றதை நாடுவோம்” என்று தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்