உண்டியல் குலுக்கி சேகரித்த பணம், மைத்திரியிடம் ஒப்படைப்பு: நையாண்டி வேலை என, ஊடகம் தெரிவிப்பு

🕔 January 18, 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவுவதற்காக நடிகர் சுதத்த திலகசிறி – இன்று (18) உண்டியல் குலுக்கி பணம் சேகரிக்கும் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் அரசாங்க அதிகாரிகள் குழுவிற்கு வியாழக்கிழமையன்று (12) இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் மைத்திரிபால சிறிசேன மட்டும் 10 கோடி ரூபாவை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, இவ்வாறானதொரு தொகையை வழங்க தன்னிடம் பணம் இல்லை என்றும், தனக்குப் பிரியமானவர்கள் – நஷ்டஈடு வழங்குவதற்காக தனக்கு உதவுவார்கள் எனவும் மைத்திரி குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில், மைத்திரிபால ஸ்ரீசேனாவுக்கு நிதி உதவி வழங்குவதற்காக நடிகர் சுதத்த திலகசிறி இன்று வீதியில் இறங்கி பணம் சேகரித்தார்.

சுதத்த திலகசிறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யும் வகையில், வீதியில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தார்.

எது எவ்வாறிருந்த போதிலும் நையாண்டித்தனமான முறையில் நடிகர் இதனை செய்துள்ளதாகத் தெரிகிறது என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இருந்தபோதும், பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டில், அவரைச் சந்தித்து, தான் சேகரித்த பணத்தை நடிகர் சுதத்த திலகசிறி கையளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்