பகிடிவதை: தாக்குதலுக்குள்ளான மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🕔 November 1, 2022

கிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், அது தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மாணவர் விரிவுரைகளை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் 03.00 மணிக்குப் பின்னர் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகச் சென்று கொண்டிருந்த வேளையில், சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் வருட மாணவரின் தாடி மற்றும் மீசையை மழிக்குமாறும், காலணிகளுக்குப் பதிலாக செருப்புகளை அணியுமாறும், கைக்கடிகாரம் அணிவதைத் தவிர்க்குமாறும் கூறி, சிரேஷ்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு குறித்த மாணவர் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, அவரை சிரேஷ்ட மாணவர்கள் சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றதோடு, மூன்று சிரேஷ்ட மாணவர்கள், இரண்டாம் வருட மாணவரின் முகத்திலும் உடலிலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 07 பேர் இருந்ததாகவும், அவர்களின் பெயர் தனக்குத் தெரியாது என்றும், அவர்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் மாணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

காயமடைந்த மாணவர் ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் நீதிமன்ற மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கிரிபத்கொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments