முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான சதொச வழக்கு: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு

🕔 November 1, 2022

ரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று வழக்குகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் இருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகளைக்கு எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவர் இராஜ் பெனாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சகீர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே – கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ – லங்கா சதொச நிறுவனத்தின் 153 பணியாளர்களை 2010 – 2014 வரை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு சட்டவிரோதமான முறையில் 40 மில்லியன் ரூபாவை நஷ்டமேற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முதலாம் குற்றவாளியான ஜோன்ஸ்டன் பெனாண்டோ 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது – சட்டவிரோதமான முறையில் சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளுக்காக ஈடுபடுத்தியதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு 5 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

இன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​ஜோன்ஸ்டன் பெனாண்டோ, இராஜ் பெனாண்டோ மற்றும் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கை மறுத்து எழுத்துபூர்வமாக ஆட்சேபனைகளை சமர்ப்பித்து, தனது தரப்பினரை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

எழுத்துபூர்வ சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பான எழுத்துமூல முறைப்பாட்டை 2022 நொவம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்