பொலிஸாருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி: நீண்டகாலம் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை இணக்கம்

🕔 October 21, 2022

நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவை உபகுழுவினால் ஆய்வு செய்யப்படும் என, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

2020 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை சேவைக் காலத்தை பூர்த்தி செய்த 8,312 பொலிஸார் மற்றும் சார்ஜென்ட் மற்றும் கொன்ஸ்டபிள் உள்ளிட்ட பெண் பொலிஸார் 1,105 பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, அமைச்சர் டிரான் அலஸ் – அமைச்சரவையில் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்ததாக, பொது பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் தெரிவித்தது.

இந்த முன்மொழிவின்படி, 10 ஆண்டுகள் சேவைக் காலத்தை நிறைவு செய்த சிறப்பு அதிரடிப் படையின் நான்கு பரிசோதகர்கள், 290 உப பரிசோதகர்கள் (இவர்களில் 54 பேர் அதிரடிப்படையினர்), 1630 பொலிஸ் சார்ஜன்ட் (இவர்களில் 122 பேர் அதிரடிப்படையினர்), 621 பெண் பொலிஸ் சார்ஜன்ட், 6,243 பொலிஸ் கொன்ஸ்டபிள், 484 பெண் பொலிஸார், 15 பொலிஸ் சார்ஜென்ட் சாரதிகள் மற்றும் 130 பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதிகள் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர்.

,இவ்வாறு பதவி உயர்வை எதிர்பார்த்துள்ள பல பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைக் காலம் 30 வருடங்களைத் தாண்டியுள்ளது. அவர்களின் தற்போதைய பதவியின் சேவைக் காலம் 15 வருடங்களைத் தாண்டியுள்ளன. மேலும் பதவி உயர்வு கோரும் பெருமளவிலான உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதவி உயர்வு பெறுவதற்குத் தேவையான சேவைக் காலத்தை பூர்த்தி செய்யாத பல பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களை அரசியல் செல்வாக்கு காரணமாக இந்தப் பட்டியலில் சேர்த்ததன் காரணமாக, இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்த போதிலும், ஏற்கனவே அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சில பிரச்சினைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் அமைச்சரவை உபகுழு அடுத்த வாரம் பிரேரணையை ஆராயும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்து்ளளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்