அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் போதைப்பொருள் விற்கப்பட்ட விவகாரம்; நேரடியாக விசாரிக்கச் செல்கிறேன்: வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

🕔 October 10, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மாணவர் ஒருவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் – நாளை மறுதினம் பாடசாலைக்குச் சென்று நேரடியாக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம். றஹ்மதுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக விளக்கம் கோரி, பாடசாலை அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

‘புதிது’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியினைப் படித்தே, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் அவ்வாறானதொரு சம்பவம் நடந்துள்ளதை தான் அறிந்து கொண்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு சம்பவம் நடந்திருந்தால், அது மிகவும் ஆபத்தானது என்றும், அவ்விடயம் தொடர்பில் மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், அங்குள்ள மாணவர்களுக்கு கஞ்சா என நம்பப்படும் போதைப் பொருளை கடந்த 04ஆம் திகதி விற்பனை செய்திருந்தார்.

இவ்வாறு போதைப் பொறுளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் பிடித்து, ஒழுக்காற்றுக் குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர் மற்றும் அதிபரிடம் ஒப்படைத்த போதும், இது தொடர்பில் அதிபர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதோடு, அப்படியொரு சம்பவம் பாடசாலையில் நடக்கவில்லை என அதிபர் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குள் போதைப் பொருள் வியாபாரம்: மாணவர்கள் சிக்கிய போதும், சம்பவத்தை மூடி மறைக்கிறது நிர்வாகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்