தலைப்புச் செய்திகள்

மறைந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான மோகனதாஸ் இன, மத பேதங்களைக் கடந்து விளங்கியவர்: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

ஆசிரியர், ஊடகவியலாளர், கட்டுரையாளர், நேர்முகவியலாளர் மற்றும் நாடக ஆற்றுகைக் கலைஞர் என, தான் சார்ந்துள்ள துறைகளில் இன உறவு விரும்பியாகச் செயற்பட்ட பாக்கியராஜா மோகனதாஸின் இழப்பு – மிகுந்த கவலையை அளிப்பதாக, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் -அதன் தலைவரும் இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். மூஸா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலக்கிய நாடகமும் அரங்கியலும் துறையில் நுண் கலைமாணிப் பட்டதாரியான பாக்கியராஜா மோகனதாஸ் – சம்மாந்துறை தேசிய பாடசாலையின் ஆசிரியராக இருந்து, ஆசிரியத்துவத்தின் மேன்மைக்காகத் தன்மை அர்ப்பணித்த ஒருவராகச் செயற்பட்டு பாடசாலைச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்.

ஊடகத்துறக்குள் நுழைந்த மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் தேசிய ரீதியில் அறியப்பட்ட மோகனதாஸ், சுழலும் ஓர் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.

இன மத பேதங்களைக் கடந்த – நாட்டின் எத்துறையிலும் சிறந்து விளங்கியவர்களை பத்திரிகை உலகுக்குஅடையாளப்படுத்தி இவர் இன்பம் கண்டவர். ’76 தேர்ந்த நிலையாளர்களை வெளிக்கொணர்ந்த நேர்காணல்கள்’ என்ற நூல் – இவ்வகை நூல்களில் அதிக கவனயீர்ப்பைப் பெற்றது.

மோகனதாஸின் கலைத்துறை ஈடுபாட்டினை ஏற்றுக் கொண்டு கிழக்கு மாகாணம் 2018 இல் வழங்கிய ‘பல்துறைக் கலைஞர் விருது’ உட்பட பல்வேறு விருதுகளையும் தனதாக்கிக் கொண்ட அவரின் இறப்பு இடைவெளிக்குரியது.

அவரின் ஆத்மா சாந்தியடைய மனம் நெகிழ்கிறது.

துறைநீலாவணையைச் சேர்ந்த ஆசிரியர் மோகனதாஸ் – உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (24) காலமானார்.