தலைப்புச் செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக ரத்தினபுரி சிறிபாகம – குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்து கொண்டார்.

“நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம். இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும்” என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் இன்று (14) பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதியின்றி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாருக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.