ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

🕔 March 20, 2022

ம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு தோல்விடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் குற்றஞ்சாட்டினார்.

சம்மாந்துறை அப்துல் மஜீட் நகரமண்டபத்தில் நேற்று (19) நடைபெற்ற மு.காங்கிரஸின் இளைஞர் மாநாட்டில்,கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த நிலையில், அவரின் முன்பாக இந்த விடயத்தை மன்சூர் குறிப்பிட்டார்.

“கடந்த தேர்தலில் ஹரீசுக்கு அவரின் சொந்த ஊரான கல்முனையில் 5500 வாக்குகளே கிடைத்தன. பைசல் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரில் அவருக்கு 3500 வாக்குகளே கிடைத்தன. ஆனால், எனது சொந்த ஊரான சம்மாந்துறையில் எனக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 19 ஆயிரமாகும்.

இருந்த போதிலும் ஹரீசும், பைசல் காசிமும் தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை சிலவிட்டு, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்” என, மன்சூர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சம்மாந்துறையிலிருந்து விருப்பு வாக்குகள் வழங்கப்பட்ட போதிலும், சம்மாந்துறையிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தனக்கு, முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஊர்களிலிருந்து வாக்குகள் கிடைக்கவில்லை எனவும் இதன்போது மன்சூர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments