கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு

🕔 December 17, 2021

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தேடுவே ஆனந்த தேரரிடமிருந்து தங்களின் சான்றிதழ்களை பெறுவதற்கு பட்டதாரிகள் மறுப்புத் தெரிவித்தார்கள் என ஆசியன் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மரபின் பிரகாரம் பட்டமளிப்பு விழாவில், வேந்தர்தான் சான்றிதழ்களை வழங்குவார்.

இருந்தபோதிலும் இம்முறை, சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள – பட்டதாரிகள் மறுப்புத்தெரிவித்ததோடு, சான்றிதழ்களை உபவேந்தர் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்புகளும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இன்றும் (17), நாளையும் (18) நாளை மறுநாளும் (19) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்