பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம்

🕔 October 13, 2021
பிரதமருடன் ஜோசப் ஸ்டாலின் – நேற்றைய சந்திப்பு

மது பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க இணையவழிக் கற்பித்தல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு – குறித்த தொழிற்சங்க ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலறி மாளிகையில் நேற்று தாங்கள் நடத்திய சந்திப்புக் குறித்து ஆராய்வதற்காக அதிபர் – ஆசிரியர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஒன்று கூடின.

அதிபர் – ஆசிரியர் சங்கங்களுடன் நேற்று பிரதமர் நடத்திய சந்திப்பின்போது, சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் தீர்க்க முடியும் என்று பிரதமர் கூறியதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

முதல் கட்டம் ஜனவரி 2022 இல் செயல்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள இரண்டு கட்டங்கள் ஜனவரி 2023 இல் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியதாகவும், 2022ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் பிரச்சினையை தீர்ப்பது சாத்தியமில்லை என – நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் ஜோசப் ஸ்டாரின் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்