மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

🕔 September 25, 2021

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்துக்கு லொஹான் ரத்வத்த தலைமை தாங்கினார்.

இம்மாதம் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறை வளாகங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து சர்ச்சைக்குள்ளான லொஹான் ரத்வத்த, கடந்த இரண்டு வாரங்களாக பொது நிகழ்வுகளில் தோன்றவில்லை.

அநுராதபுரம் சிறை வளாகத்திற்குள் புகுந்து கைதிகளை துப்பாக்கியால் மிரட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வுக்கான ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த விலகினார்.

இந்த நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதியொருவரை நீதியமைச்சு நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments