தலைப்புச் செய்திகள்

விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில்

Poison - 097– க. கிஷாந்தன் –

பாடசாலைக்கு வரும் வழியில் விசம் அருந்திய – இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள், ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விசமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

இந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ மாணவிகளை அறிவுறுத்தும் கூட்டமொன்று நேற்று புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தவணை ப்பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரீட்சையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், இன்னும் இருக்கின்ற ஒரு சில நாட்களை நன்றாகப் பயன்படுத்தி கூடுமானவரை படிப்பில் அக்கறை செலுத்துமாறும் அந்தக் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற அனைத்து மாணவர்களும், இன்று வியாழக்கிழமை தமது பெற்றோர்களுடன் பாடசாலைக்கு வருகை தந்து, பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வினையடுத்தே, பாடசாலைக்கு வருகின்ற வழியில் கெமிலிதென்ன தோட்டத்தில் மூன்று மாணவிகள் விசம் அருந்திய சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

விசமருந்திய மாணவிகளை உடனடியாக, பெற்றோர் அங்குள்ள அயலவர்களின் உதவியுடன் கொத்மலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, அவர்கள் கம்பளை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்கள் தொடர்ந்தும் இவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவை ஏற்படும் பட்சத்தில் இவர்களை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.