மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில

🕔 September 16, 2021

நாட்டின் கடன் சுமையை விடுவிக்க மன்னார் கனிய எண்ணெய் வளத்தால் தான் முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மன்னார் பேசாலைப் பகுதியில் எம் -2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 30 லட்சம் கோடி ரூபா) ஆகும்.

குறித்த பகுதியில் 09 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 03 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையிலிருந்து எமக்கு 167 பில்லியன் அமெரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் சுமார் 33 லட்சம் கோடி) சம்பாதிக்க முடியும்.

இலங்கை அரசு மற்றும் ஏனைய நிறுவனங்கள் தற்போது 47 பில்லியன் அமெரிக்க டொலருக்கு (09 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) கடன்பட்டிருப்பதாகவும், அவற்றிலிருந்து விடுபடு தற்கான ஒரே வழி – இலங்கையில் உள்ள மன்னார் பேசாலை கனிய எண்ணெய் வளம் மற்றும் எரிவாயுவை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தினாலும் 133.5 பில்லியன் அமெரிக்க டொலரை மீதப்படுத்தலாம் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்வது ஒரு முக்கியமான தருணத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய அபிவிருத்திச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, பெட்ரோலிய அபிவிருத்தி ஆணைக்குழு இதற்காக அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற் தடவையாக விமானங்களைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக குறித்த ஆய்வுகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன.

நாட்டில் கனிய எண்ணெய் காணப்படக்கூடிய பகுதிகள் 20 ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்று நீண்டகாலம் ஆய்வு செய்வதாகவும், அதற்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் குறித்த 20 பெரும் பகுதிகளையும் 837 அலகாகப் பிரித்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரைபடத்துக்கு அமைய தரவுகளை சேகரிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்