சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’?

🕔 August 12, 2021

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘தமிழன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜாவின் குடியிருப்பு தொடர்மாடிக்கு தம்மை சிஐடி (குற்றப் புலனாய்வு பிரிவினர்) எனக் கூறிக் கொண்ட இருவர் இன்று அதிகாலை 2.35 மணியளவில் சென்று, அவரைப் பற்றி விசாரித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு சிவராஜா முறையிட்டுள்ளார்.

குறித்த நபர்கள் இருவரும் தன்னைப் பற்றி குடியிருப்பு காவலரிடம் விசாரித்ததாகவும், தனது வீட்டுக்குச் செல்ல அவர்கள் முயன்ற போதும் காவலர் அதனை அனுமதிக்காமல் ‘பொலிஸாருடன் வாருங்கள்’ என்று கூறியமையினால், அவர்கள் காவலருடன் முரண்பட்டு – நீண்ட நேரம் அங்கு காத்திருந்து விட்டு திரும்பிச் சென்றதாகவும், சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா தெரிவித்துள்ளார்.

‘கடந்த சில மாதங்களாகவே இப்போதைய அரசாங்கத்தை எமது பத்திரிகையிலும், எனது தனிப்பட்ட சமூக ஊடக வெளியிலும் நான் விமரிசித்து வந்திருக்கிறேன். எனது ஊடக வாழ்வில் நான் உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கிறேன், சொல்லியிருக்கிறேன். இப்போதும் சிஐடி என்று கூறி என்னை தேடி வந்தவர்கள் பகலில் அலுவலகத்துக்கு வராமல் நடுநிசியில் வீடு தேடி வந்த மர்மம் என்னவோ’ என்று, தனது பேஸ்புக் பக்கத்தில், சம்பவம் குறித்து பதிவு செய்துள்ள சிவராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

வசந்தம் தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சியை நடத்திய பின்னர் நேற்று நள்ளிரவில், அநேகமாக இன்று அதிகாலை அவர் வீடு திரும்பிய பின்னர், இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் சிவராஜா குறிப்பிட்டுள்ளார்.

‘அரசாங்கத்தை விமர்சிப்பது நிறுத்தப்பட வேண்டுமென சொல்லும் மொழி இதுதானா என்று கேட்கவிரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ள சிவராஜா; ‘அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன் கூடாது என்பதையாவது சம்பந்தப்பட்ட தரப்பினர் சொல்ல வேண்டும்’ தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

‘ஊடக வாழ்வில் எத்தனையோ ரணங்களை சந்தித்த எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. இதுவும் கடந்துபோகும். ஆனால் இப்படி வந்து அழைத்து அழுத்தங்களை கொடுப்பீர்களானால் நான் இன்னும் எழுதுவேன்’ எனவும் அந்தப் பதிவில் சிவராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராகவும் ஆர். சிவராஜா பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்