அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை

🕔 March 23, 2021

– பழீல் பி.ஏ –

லங்கை முஸ்லிம்களின் தேசிய மீலாதுன் நபி பிரகடனத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கி, கடந்த வருடம் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

அட்டாளை மண்ணின் பூர்வீக, சிறப்புமிகு வரலாற்றுச் சின்னமாக, மிளிரவேண்டிய தேசிய மீலாதுன் நபி நினைவுத் தூபி, எந்தவித சிந்தனையுமில்லாமல், 2020ல் இடித்தழிக்கப்பட்டது.

இப்பாரிய குற்றச் செயலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் யார்? இது எமது பூர்வீக வரலாற்றில் அது ஒரு மைற்கல். அந்த நினைவுத் தூபியின் வரலாற்று மகிமை, மாண்மியம், அதில் அட்டாளைச்சேன கொண்டுள்ள வரலாற்று, கலாசார, பண்பாட்டு வகிபாகம் என்பவற்றை விளங்கிக் கொள்வற்கு சிலரின் பக்குவம் அறிவு ஆற்றல் இடம் கொடுக்குமோ தெரியாது.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள், மீலாதுன் நபி விழாவினை தேசிய அரச விழாவாக, அரச அணுசரணை கலாசார அபிவிருத்திகளோடு, வருடாவருடம் பொது விடுமுறையுடன் கொண்டாடுவதற்கு, மறைந்த பெருந்தலைவர் அஸ்ரப்பின் உரிமைப் போராட்ட பெருமுயற்சியின் பலனாக வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அத்தூபி பறைசாற்றி நின்றது.

அதன் ஆரம்ப அங்குரார்ப்பண விழா 1997ல் எமது அட்டாளைச்சேன மண்ணில் இடம்பெற்றதனால், அந்த வராலாற்று நினைவுத் தூபி இஸ்லாமியக் கலை சிற்பங்களோடு அஸ்ரப்பினால் சர்வதேச ஒப்பீடுகளுக்கேற்ப, அவரின் கலையழகு கற்பனா சக்திகளுடன் பள்ளிவாசலுக்கருகில் பாதுகாப்பாக நிர்மாணிக்கப்பட்டது.

1997ல் முஸ்லிம் கலாசார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு கொண்டு இத்தூபி அமைக்கப்பட்டு அரச பொதுச் சொத்தாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டது.

இவ்வாறான நினைவுச் சின்னத்தை தூர நோக்கில்லாமல் தான்தோண்றித் தனமாக அழித்து விடுவதனால்தான், இன்று வரலாற்று பூர்வீகமற்ற, வந்தான் வரத்தான் எனும் இகழப்படக் கூடிய சமுகமாக நாம் எள்ளிநகையாடப் படுகின்றோம்.

இப்போது கூறுங்கள், இது பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டுமா?அல்லது ஒருசிலரின் குறுகிய நோக்கத்தக்காக சிதைத்து இடித்தழிக்கப்பட்டமை சரிதானா?

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்