அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்?

🕔 August 21, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் தேசிய மீலாத் தின நினைவுத் தூபியை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி – புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘போலி’ தூபியின் உத்தியோகபூர்வத் திறப்பு விழா, இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி நிர்மாணிக்கப்பட்ட – இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்துகின்ற தூபியை புனர் நிர்மாணம் செய்வதற்காக, கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் ஊடாக 30 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், இருந்த தூபியை புனர் நிர்மாணம் செய்வதற்குப் பதிலாக, இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் அந்தத் தூபியை முற்றாக உடைத்து அழித்து விட்டு, வேறொரு தூபி அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த தூபி – உயர்தர மாபிள் கற்களால் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய தூபி வெறும் சீமெந்துப் பூச்சுக்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, மாற்றுக் கலாசாரங்களை வெளிப்படுத்தும் கட்டடக் கலையில் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொன்மையான, நினைவிடங்களை புனர் நிர்மாணம் செய்வதென்பது, இருப்பதில் முடிந்தளவு மாற்றங்களைச் செய்யாமல் அதனை துப்புரவாக்கி அழகுபடுத்தும் நடவடிக்கையாகும்.

ஆனால், அட்டாளைச்சேனையில் இருந்த மீலாத் தினைவுத் தூபியை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி, இருந்ததை முற்றாக உடைத்து அழித்து விட்டு, அந்த இடத்தில் ‘ஒன்றுக்கும் உதவாத’ தூபியொன்றை அமைத்துள்ளனர்.  

இது ஒருபுறமிருக்க – தற்போதைய போலி தூபியை நிர்மாணிக்க 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றமை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாரோ சிலர் உழைப்பதற்காக – அட்டாளைச்சேனை மீலாத் தூபி பலியிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை மீலாத் தூபியை இவ்வாறு நாசம் செய்து, போலித் தூபி அமைத்ததன் பின்னணியில் கிழக்கு மாகாண சபையிலுள்ள அரச அதிகாரியொருவர் இருக்கின்றார் எனக் கூறப்படுகிறது.

எனவே, பெருந்தொகையான நிதியை இவ்வாறு விரயமாக்கி, இருந்ததையும் இல்லாமல் செய்து, போலித் தூபியை உருவாக்கியமை தொடர்பில் – கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிடுவதற்கு, சமூக அக்கறையாளர் குழுவொன்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

தொடர்பான செய்தி:

01) அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

02) அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்