அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு

🕔 March 5, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மீலாத் தூபி, இந்து கலாசார கட்டட வடிவமைப்பை ஒத்த வகையில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதாக ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியதை அடுத்து, தற்போது அந்த வடிவமைப்பின் ‘சில பகுதிகள்’ உடைக்கப்பட்டு வருகிறது.

அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா இடம்பெற்றமையின் நினைவாக, அங்குள்ள பிரதான வீதியின் சந்தைப் பகுதியில் இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையிலான தூபியொன்று நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அந்தத் தூபியை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி, அதிலிருந்த இஸ்லாமிய கட்டட வடிவமைப்பு அகற்றப்பட்டு, இந்து கலாசார கட்டட வடிவமைப்புக்கு ஒத்ததாக, குறித்த தூபி உருவாக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாண சபையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 30 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், இந்த தூபி புனரமைக்கப்படுவதாகத் தெரிய வருகிறது.

இந்து கலாசார கட்டடக் கலைக்கு ஒப்பானதாக மீலாத் தூபி வடிவமைக்கப்படுவதை ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டும் வரையில், இதனுடன் தொடர்புபட்ட எவரும் அறிந்திருக்கவில்லையா? அல்லது வேண்டுமென்றே இஸ்லாமிய கலாசாரக் கட்டட வடிவமைப்புகள், மீலாத் தூபிலிருந்து அகற்றப்படுகின்றனவா என்கிற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

அதேவேளை, முன்கூட்டிய திட்டமிடல்கள் இன்றி – இந்த தூபி புனர் நிர்மாணம் செய்யப்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் சில பகுதிகளை மீண்டும் உடைப்பதனால் ஏற்படும் வீண் செலவை யார் பொறுப்பேற்பது என்றும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

பொருத்தமற்ற ஒரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியை அகற்றுவதை விடுத்து, அதனை புனரமைப்பதற்காக எனக் கூறி, யாரோ சிலர் உழைப்பதற்காக 30 லட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்றும் இப்பிரதேச மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

தற்போது 30 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படும் இந்தத் தூபி தொடர்பான முழு விவரங்களையும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் முயற்சிப்பதோடு, இது தொடர்பில் உயர் மட்டத்துக்கு முறையீடு ஒன்றைச் செய்வதற்குகும் தயாராகி வருகின்றனர்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்