அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

🕔 February 19, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி, அதன் நினைவாக அப்பிரதேசத்தில் நிர்மாணிக்பபட்ட இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்துகின்ற தூபி – தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறித்து பல்வேறு வகையான விமர்சனங்களையும், புகார்களையும் அப் பிரதேச மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அவரின் முயற்சியினால் 1997ஆம் ஆண்டு அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் தேசிய மீலாதுன்நபி விழா நடத்தப்பட்டது.

இதனையொட்டி, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் பாவங்காய் வீதியின் முன்பாக – வீதிச் சுற்றுவட்டமொன்றை உருவாக்கி, அதில் மீலாத் நினைவுத் தூபியொன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆயினும், அவ்வாறு வீதிச் சுற்றுவட்டம் நிர்மாணிக்கப்படும் போது, சிலரின் குடியிருப்புக் காணிகளின் சில பகுதிகள் – அந்தத் தேவைக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நிலையும் காணப்பட்டது.

அதனால், சுற்றுவட்ட நிர்மாணத்துக்காக தமது காணிகள் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டவர்களில், அப்போது அரசியல் அதிகாரம் கொண்ட சிலர், அந்தச் சுற்றுவட்டத்தை அங்கு அமைக்காமல், சுற்று வட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட மீலாத் நினைவுத் தூபியை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியில் நிர்மாணித்தனர்.

இதனால், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாலினுடைய பெறுமதி மிக்க காணியின் ஒருபகுதி அந்தத் தூபி நிர்மாணத்துக்காக இழக்கப்பட்டது. மட்டுமன்றி, பொருத்தமற்ற ஓரிடத்தில் அந்தத் தூபி அமைக்கப்பட்டதால், அதன் அழகும் முழுமையாக வெளிப்படவில்லை.

இதேவேளை, குறித்த தூபி நிர்மாணிக்கப்பட்ட பகுதியில் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சந்தையும் அமைந்துள்ளதால், தூபியின் அடிவாரம் ஆடு, மாடுகள் தரிக்கும் இடமாகவும் மாறிப்போனது.

இந்த நிலையில்தான், தற்போது அந்தத் தூபியை புனர் நிர்மாணம் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.

கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் 30 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த தூபி நிர்மாண வேலைகள் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில், இது குறித்து இப்பிரதேச மக்கள் பல்வேறு விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். அவை;

  • பொருத்தமற்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட தூபியை அங்கிருந்து அகற்றாமல், அதனை அதே இடத்தில் வைத்து புனர் நிர்மாணம் செய்ய வேண்டியதன் தேவை என்ன?
  • பொருத்தமற்ற ஒரு தூபியை தொடர்ந்தும் அங்கு வைத்திருப்பதன் மூலம், பெரிய பள்ளிவாசலின் பெறுமதியான காணித்துண்டை பிரயோசனமற்றதாக்குகின்றமை பற்றி, ஏன் இதனுடன் தொடர்புபட்டவர்கள் சிந்திக்கவில்லை.
  • 30 லட்சம் ரூபா நிதியில் சாதாரணமாக இரண்டு தூபிகளையே நிர்மாணிக்க முடியுமென, விடயம் அறிந்தவர்கள் கூறும் நிலையில், ஒரு தூபியை புனர்நிர்மாணம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாவை ஒதுக்கி, இதில் லாபம் உழைக்க முயற்சிப்பவர்கள் யார்?

என, பல்வேறு கேள்விகளை அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் முன்வைக்கின்றனர்.

இதேவேளை, முன்னர் இருந்த தூபி – இஸ்லாமிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தபோதும், இப்போது புனர்நிர்மாணம் செய்யப்படும் தூபி அமைப்பு, இந்து கலாசாரத்தை வெளிப்படுத்தும் கட்டடக் கலைக்கு ஒப்பானதாக இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, இந்தத் தூபிக்கு அருகாமையில் மீன் சந்தை இருந்து வருகின்றமையினால், அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுவதோடு, மீன் ஏற்றிவரும் வாகனங்களிலிருந்து ஒழுகும் நீரினால் வீதியோரம் அசிங்கமடைகின்றது. இதனால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை தினமும் எதிர்கொண்டு வருகின்றனர்.

மீன் விற்பனையாளர்களுக்கு உரிய சந்தை அமைப்பை பிரதேச சபையினர் உருவாக்கிக் கொடுக்காமையினாலேயே இந்த நிலை காணப்படுகிறது.

மீன் விற்பனையாளர்களும் தமக்கு பொருத்தமான ஓரிடத்தில் மீன் சந்தையை உருவாக்கித் தருமாறு, பிரதேச சபையிடமும் உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் பல வருடங்களாக வேண்டுகொள் விடுத்து வருகின்றபோதும், அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனவேதான், ஊரின் நடுப்பகுதியில் முக்கியமானதொரு இடம் நாளாந்தம் துர்நாற்றம் வீசும் நிலையில் காணப்படுகின்ற போது, அதற்கு அருகில் பொருத்தமற்றதொரு இடத்தில் அமைந்துள்ள ஒரு தூபியை, 30 லட்சம் ரூபா செலவில் புனரமைப்பது என்பது, தேவையற்ற காரியமாகத் தெரியவில்லையா என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மக்களுக்கு எது தேவையோ அதனை அமைத்துக் கொடுப்பதே, சமூகம் மீது அக்கறையுள்ளவர்களின் செயற்பாடாக இருக்க வேண்டும்.

அதைவிடுத்து, ‘காசைக் கரியாக்கும்’ இவ்வாறான தேவையாற்ற நிர்மாண வேலைகளைச் செய்வதனால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும், வேண்டுமென்றால், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு ஏதாவது லாபம் கிடைக்கக் கூடும் என்றும் இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்போர் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்