தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு

🕔 March 1, 2021

சிறிலங்கா சுதந்திர கட்சியை அடகு வைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொண்டதன் பயனை, அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அனுபவிக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மையான குற்றவாளியை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கண்டறியவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பற்ற செயற்பாடுகளை மாத்திரம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமருக்கிடையில் காணப்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள இவர் தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டிக்கவில்லை.

பிரதமர் என்ற ரீதியில் அவர் நாடாளுமன்றிற்கும், நாட்டு மக்களுக்கும் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு தன்னை அனுமதிக்கவில்லை என்ற விடயத்தை பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அவரும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அலட்சியமாக செயற்பட்டார். இவ்விரு அரச தவைவர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அடிப்படைவாதிகளின் குண்டுத்தாக்குதலை முழுமையான தேர்தல் பிரசாரமாக்கி பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றிக் கொண்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் என்ற ரீதியில் இவர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு அதிகாரத்துறை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, உண்மையான குற்றவாளி யார் என்பது குறிப்பிடப்படவில்லை.

சுதந்திர கட்சியை அழிக்க சூழ்ச்சிகள் இடம் பெறுவதாகக் கூறுவது நகைப்புக்குரியது. அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவர்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்பட்டுள்ளார்கள்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் யானை தன் தலை மீது தானே மண்ணையள்ளி போட்டுக் கொண்டதற்கு ஒப்பானதாகும்.

வீழ்ச்சியடைந்துள்ள சுதந்திர கட்சியை பாதுகாக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

அனைத்து செயற்பாடுகளுக்கும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தடையாக இருந்தார்.

பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவதாக கூறி கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்பட்டார்.

கட்சியின் உறுப்பினர்கள் தற்போது கட்சியை பாதுகாக்க பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக ஒருபோதும் எதிர்ப்பை வெளிப்படுத்தமாட்டார்கள். சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மாத்திரமே தனித்து விடப்பட்டுள்ளார்கள். சுதந்திர கட்சியின் தற்போதைய நிலை கவலைக்குரியது” என்றார்.

Comments