அமீரலி ஒரு தடவை, ஹாபிஸ் நஸீர் ஒரு தடவை; கட்டிடம் ஒன்று, திறப்பு விழா இரண்டு
ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பிரதியமைச்சர் அமீரலி திறந்து வைத்த பின்னர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் வருகை தந்து, அதே கட்டிடத்தினை திறந்து வைத்த விநோத சம்பவம் நேற்று புதன்கிழமை நிகழ்ந்தது.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தில், விஞ்ஞான கூடமொன்று மத்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த ஆய்வு கூடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நேற்று புதன்கிழமை திறந்து வைக்கவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி திறந்து வைத்தார்.
இதன் பின்னர், ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்அஹமட், அதே விஞ்ஞான கூடத்தை மீண்டும் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ: நன்றி – News 1st