ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம்

🕔 May 16, 2020

– அஹமட் –

னியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றுக்கான கோபுரத்தை அமைப்பதற்கு, அந்த நிறுவனத்துடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், தமக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள காணியில் அனுமதி வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கான தொலைத் தொடர்புக் கோபுரம் ஒன்றினை நிர்மாணிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றன.

பொதுமக்கள் பெருமளவில் நாளாந்தம் கூடும் சந்தைப் பகுதிக்கு அருகிலுள்ள மேற்படி இடத்தில், குறித்த தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டால், அதனால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி, குறித்த நிர்மாண வேலைக்கு பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும், குறித்த தொலைத் தொடர்பு கோபுர நிர்மாண வேலையை நிறுத்துமாறு கோரி, பொதுமக்கள் கையொப்பமிட்ட கடிதமொன்றும் கடந்த மார்ச் மாதம் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு விசாலமிடப்பட்டு, பிரதேச சபையில் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டட வளவினுள் தனியார் நிறுவனமொன்றுக்கான தொலைத் தொடர்புக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு முன்னதாக, குறித்த நிறுவனத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை எழுத்து மூல ஒப்பந்தங்கள் எதையாவது செய்து கொண்டுள்ளதாக என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்துக்கு பதிலளிக்கும் வகையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, குறித்த தனியார் நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தங்களையும் பிரதேச சபை செய்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால்,

  • பிரதேச சபைக்குச் சொந்தமான அரச காணியொன்றினுள் தனியார் நிறுவனமொன்று தனக்கான கோபுரமொன்றினை நிர்மாணிப்பதற்கு எவ்வித ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளாமல் அனுமதியளித்தது யார்?
  • எவ்வித ஒப்பந்தமும் இன்றி பிரதேச சபைக்குச் சொந்தமான காணியினுள் தனியாளர் நிறுவனமொன்று கோபுரமொன்றை அமைக்கும் வேலையை பிரதேச சபை தவிசாளரும் செயலாளரும் எவ்வாறு அனுமதித்தனர்?
  • ஒப்பந்தங்கள் இன்றி பிரதேச சபைக்குள் தனியார் நிறுவனமொன்று முன்னெடுத்த செயற்பாட்டை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் ஏன் தடுக்கத் தவறினர்?
  • குறித்த தனியார் நிறுவனத்திடமிருந்து பிரதேச சபையிலுள்ள சிலர் பணம் பெற்றுக் கொண்டே, இந்த சட்ட விரோத நடவடிக்கையை அனுமதித்ததாக மக்கள் கூறும் தகவல் உண்மையானதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடைந்து, அவற்றினை மக்களுக்கு ‘புதிது’ செய்தித்தளம் விரைவில் வழங்கும்.

தொடர்பான செய்திகள்:

01) அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

02) அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

03) தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்