அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

🕔 March 11, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனத்துக்குரிய ‘அன்டனா’வை பொருத்தும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் கடிதமொன்று, இன்று புதன்கிழமை காலை, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கையளிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு விலாசமிடப்பட்டு, பொதுமக்களின் கையொப்பங்களுடன் எழுதப்பட்ட மேற்படி கோரிக்கை கடிதத்தினை, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், சமூக ஆர்வலர் கே.எம்.எம். பரீட் ஆகியோர் இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கையளித்தார்கள்.

குறித்த கடிதத்தில்;

‘அட்டாளைச்சேனை சந்தைப் பகுதிக்கு அருகாமையிலுள்ள பிரதேச சபைக்குத் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள வளவில் – கம்பம் ஒன்றை நிர்மாணித்து, அதில் தனியார் தொலைபேசி நிறுவனமொன்றுக்குரிய அன்டனாவை பொருத்தும் வேலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு, இது குறித்து வினவியபோது; நிர்மாணிக்கப்படவுள்ள கம்பத்தில் தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் அன்டனாவை பொருத்தவுள்ளதாகவும், இதற்காக குறித்த தனியார் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து மாதாந்த வாடகையாக 05 ஆயிரம் ரூபாவை பிரதேச சபை பெறவுள்ளதாகவும் செயலாளர் பாயிஸ் அவர்கள் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையின் சந்தைப் பகுதிக்கு அருகாமையில் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து போகும் இடமொன்றில், இவ்வாறான தொலைபேசி நிறுவனத்தின் அன்டனாவை பொருத்துவது, மக்களின் ஆரோக்கியத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

தொலைத்தொடர்பு அன்டனாக்களிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளினால், மனிதர்கள் உட்பட உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இவ்வாறான அன்டனாக்களை ஆட்கள் நடமாட்டமுள்ள இடங்களில் பொருத்துவதற்கு எதிராக, நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடத்தி, இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தியுமுள்ளனர்.

ஆகவே, சன நடமாற்றம் இல்லாத அல்லது குறைந்த பகுதிகளிலேயே இவ்வாறான அன்டனாக்கள் பொருத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுதல் வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, பொறுப்புள்ள பிரதேச சபையொன்று மக்களின் நலன் மீதே முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், மேற்குறிப்பிட்ட இடத்தில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் அன்டனாவை பொருத்தும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு, மேலே பெயர் குறிப்பிடப்பட்ட நாங்கள், இந்தக் கடிதத்தின் கீழ் கையொப்பம் இட்டுள்ள பொதுமக்களுடன் இணைந்து தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன், குறித்த இடத்தில் கம்பம் அமைப்பதற்காக தரைப்பகுதியில் இடப்பட்டுள்ள கட்டுமானங்களையும் அந்த இடத்திலிருந்து முற்றாக அகற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

எமது கோரிக்கைகளை உடனடியாகக் கவனித்திற் கொள்ளத் தவறினால், மக்கள் மீதும், சுற்றுச் சூழல் மீதும் அக்கறை கொண்ட மக்களாகிய நாம், மேற்படி நடவடிக்கைக்கு எதிராக
ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தவும் தயாராகவுள்ளோம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தங்களின் உடனடி நடவடிக்கைகளை விரைவில் எதிர்பார்கின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுவோரும், மேற்படி கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

கடிதத்தில் கையொப்பமிடுவோர்…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்