தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான்

🕔 March 15, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை சந்தைப் பகுதியிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றின் ‘அட்டனா’வை பொருத்துவதற்கான கோபுரம் ஒன்றை அமைக்கும் நிர்மாண வேலைகள், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துமாறு கோரி, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், சமூக ஆர்வலர் கே.எம்.எம். பரீட் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளருக்கு விலாசமிட்டு கடிதமொன்றை எழுதி, பொதுமக்களின் கையெழுத்துக்களுடன் அதனை அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடந்த புதன்கிழமையன்று சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து மறுநாள் வியாழக்கிழமையன்று நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில், குறித்த கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எதுஎவ்வாறாயினும், மக்களின் சுகாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென அஞ்சப்படும் மேற்படி ‘அட்டனா’வை, மக்கள் கூடும் சந்தைப் பகுதியில் பொருத்துவதற்கு பிரதேச சபை ஏற்கனவே அனுமதித்திருந்தமையினாலேயே, குறித்த கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதேவேளை, பல கோடி ரூபாய்கள் பெறுமதியான பிரதேச சபைக்குச் சொந்தமான இடத்தில், மேற்படி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அட்டனா’வைப் பொருத்தி பராமரிப்பதற்கு வாடகையாக, 05 ஆயிரம் ரூபாதான் பிரதேச சபைக்கு வழங்கப்படவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலே, இந்த ‘அட்டனா’ பொருத்தப்படவுள்ள தகவலை ‘புதிது’ இணையத்தளம் – முதன்முதலில் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதனையடுத்தே இந்த விடயம் குறித்து மக்கள் அறிந்து கொண்டனர்.

பின்னர் இந்த வேலையை உடனடியாக நிறுத்துமாறு கோரி, மக்களின் கையொப்பங்களுடன் ஊடகவியலாளர் மப்றூக் மற்றும் சமூக ஆர்வலர் பரீட் ஆகியோர் பிரதேச சபைக்கு கடிதமொன்றினை வழங்கியமையினை அடுத்தே, இந்தத் திட்டம் இப்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

பொய் கூறுவது யார்?

குறித்த தொலைத் தொடர்பு நிறுவனமானது இவ்வாறான கோபுரமொன்றை அமைப்பதற்கான அனுமதியைக் கேட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு எழுதிய கடிதத்தில், குறித்த கோபுரம் ‘பல்தேவை’க்காகப் (Multi purpose) பயன்படுத்தப்படும் என்பதைக் குறிப்பிட்டிருந்து.

அந்தக் கோபுரத்தில் வெளிச்சமான மின்விளக்குகளைப் பொருத்துவது, கண்காணிப்பு கமராக்கள் மற்றும் தொலைத் தொடர்பு ‘அன்டனா’வை பெருத்துவதே மேற்குறிப்பிடப்பட்ட ‘பல்தேவை’ நோக்கமாகும்.

இருந்த போதும், குறித்த கோபுரத்தில் ‘அன்டனா’ பொருத்தப்படவுள்ளமை பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ஆகியோர் தற்போது கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த கோபுரத்தில் ‘அன்டனா’ பொருத்தப்படவுள்ளதாக, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர், பல நாட்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த கோபுரத்தில் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தப்படுவது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று ‘புதிது’ செய்தித்தள பிரதம ஆசிரியரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லா ஒரு தடவை கூறியிருந்தமையும், பின்னர் ஒரு தடவை இவ்வாறான ‘அன்டனா’ அமைப்பதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டும் வரையில் தாம் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த விடயத்தில் உண்மைக்கு மாறான பல்வேறு விடயங்களைக் கூறியுள்ளமை தெளிவாகின்றது.

இவர்கள் இவ்வாறு முன்னுக்குப் பின், இந்த விடயத்தில் பொய்களைக் கூறுவதானது, இது விடயத்தில் இவர்கள் எதையோ மறைக்க முற்படுகிறார்கள் என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை

இதேவேளை, குறித்த தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் எதுவித எழுத்துமூல ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளாமலேயே, குறித்த இடத்தில் தொலைத் தொடர்பு கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை அனுமதியை வழங்கியுள்ளமையை ‘புதிது’ செய்தித்தளம் கண்டறிந்துள்ளது.

இவ்வாறு எழுத்து மூல ஒப்பந்தங்கள் எவையுமின்றி, அரச காணியொன்றுக்குள் தனியார் நிறுவனமொன்று நிர்மாண வேலையொன்றை மேற்கொண்டமை சட்டவிரோதமான செயற்படாகும். அதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஒப்புதலுடனேயே, அந்த சட்ட விரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, “அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன்தான், மேற்படி ‘அன்டனா’ பொருத்தும் கோபுரம் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. குறித்த உறுப்பினர்கள் விரும்பியிருக்காது விட்டால், அந்த நிர்மண வேலைக்கு நான் அனுமதி வழங்கியிருக்க மாட்டேன்” என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லா ‘புதிது’ செய்தித்தள பிரதம ஆசிரியரிடம் கூறினார்.

இந்த நிலையில், குறித்த கோபுரம் அமைக்கும் கட்டுமான வேலைகளை தாம் நிறுத்தி விட்டமையினால், அது தொடர்பில் இனியும் செய்திகளை வெளியிட வேண்டாம் என, ‘புதிது’ செய்தித்தள பிரதம ஆசிரியரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனாலும், அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் ஒட்டுமொத்த சுகாதார நலனையும் அலட்சியம் செய்து விட்டு, அந்த ஊரின் மக்கள் ஒன்று கூடும் சந்தைப் பகுதியில், இவ்வாறான தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு, குறித்த தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியவர் யார் என்பதை அறிவதற்கான முயற்சியினையும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்குரிய வழிவகைகளைத் திறந்து விடுவதற்குமான முயற்சியினை ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

இந்த விடயத்தில், யாரோ சிலர் – பெருந்தொகைப் பணத்துக்காகவே, மக்களின் ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுக்காமல், குறித்த தொலைத் தொடர்பு நிறுவனத்துக்குரிய ‘அன்டனா’வைப் பொருத்துவதற்கு இணங்கியுள்ளனர் என்கிற சந்தேகமும் பரவலாக ஏற்பட்டுள்ளது.

உள்ளுராட்சி ஆணையாளரிடம் முறையீடு

இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளரைத் தொலைபேசியில் சில தினங்களுக்கு முன்னர் தொடர்பு கொண்டு, நடந்துள்ள மோசடி குறித்து, ஊடகவியலாளர் மப்றூக் விளக்கமளித்தார்.

இதன்போது, இந்த விடயம் தொடர்பில் புகாரளிக்கப்பட்டால், அது தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, குறித்த கோபுரத்தில் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’வைப் பொருத்துவது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் தன்னிடம் கூறியதாகவும் உள்ளுராட்சி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

முறைகேடுகள்

  • மக்கள் கூடுமிடத்தில், மக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தொலைத் தொடர்பு ‘அன்டனா’வைப் பொருத்துதவற்கு, தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கியமை.
  • எழுத்து மூல ஒப்பந்தங்கள் எதனையும் செய்துகொள்ளாமல், பிரதேச சபைக்குரிய காணியில் கட்டுமான வேலைகளை மேற்கொள்ள, குறித்த தொலைத் தொடர்பு நிறுவனத்தை அனுமதித்தமை.
  • கோடி ரூபாய்கள் பெறுமதியான காணியில், தனியார் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைத்து, அதில் ‘அன்டனா’வை பொருத்துவதற்கு மாதாந்த வாடகையாக, வெறும் 05 ஆயிரம் ரூபாய் எனும் எளிய தொகையைப் பெறுவதற்குச் சம்மதித்தமை.
  • முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்களை மக்களுக்கும் மேலதிகாரிகளுக்கும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழங்கியமை.

இவ்வாறான முறைகேடுகளைப் புரிந்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

குறித்த திட்டத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை வழங்கிய அனுமதி
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கோரிக்கை கடிதம்

தொடர்பான செய்திகள்:

01) அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

02) அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்