இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி
வேலை நிறுத்தங்களை தொடக்கி வைப்பவர்களும் முடிவுக்கு கொண்டுவர முன்னிப்பவர்களும் பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் என்பது, அண்மையில் அவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார்.
“புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, செவ்விளநீர் கொடுத்து நடித்த நடிப்பும், சஜித் பிரேமதாச இந்த விடயத்தில் ஆதாயம் பெற்றுவிடுவாரோ என்று பதைத்த பதைபதைப்பும் உலகமே கண்டு வியந்தது. இவ்வாறுதான் விமல் விரவன்சவுக்கும் முன்னர் செவ்விளநீர் கொடுத்து உண்ணா விரதத்தை மஹிந்த முடித்து வைத்திருந்தார்.
ஆட்சிக் கதிரையை மீண்டும் பிடிக்கவேண்டும் என்பதற்காக பொதுஜன பெரமுனவும் மஹிந்த குடும்பமும் பட்டுத்திரியும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல . இந்த வழியிலேதான் பலோப்பியன் புகழ் ரத்ன தேரரும் காவடியாட்டம் ஆடினார். இப்போது அவரும் ராவண பலேயவை இழுத்துக்கொண்டு கோட்டாவிடம் தஞ்சம் அடைந்துவிட்டார்.
அளுத்கம தொடக்கம் குளியாப்பிட்டிய வரைக்கும் அத்தனை அட்டகாசத்தையும் செய்தவர்கள் இந்த மொட்டுகாரர்கள்தான் என்று நாட்டின் ஜனாதிபதியே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இனவாத மதகுருமார்கள் அனைவரும் இப்போது ஒட்டுமொத்தமாக கோட்டாவின் கரங்களை பலப்படுத்த தொடங்கியுள்ளனர்.
குளியாப்பிட்டி வன்முறைக்கு உதவிய அரவிந்த மதுமாதவ இப்போது இனவாத பேச்சுக்களைப் பேசி சிங்கள மக்களை மீண்டும் உசுப்பேற்றி வருகிறார்.
கொழும்பு சுகததாசவில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பகிரங்க கருத்தாடல்களுக்கு கோட்டா வராததன் காரணம் என்ன? அவருக்கு சரியாக பேச தெரியாது, எழுதிக்கொடுத்தால் மாத்திரமே வாசிப்பார்.
இப்போது அவரை ஊடகங்களுக்கு முன்னால் போகவேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் நடந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் அத்தனைக்கும் காரணம் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஊடகங்கள் இவ்வாறானவர்களிடம் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுவிடுமோ என்ற அச்சம் இருப்பதே இந்த ஆலோசனைக்கு காரணம்.
பன்சலையிலும், கோயில்களிலும், பள்ளிவாசல்களிலும், பிரதானமாக நான்கு கதிரைகளை போட்டு இந்த குடும்ப முக்கியஸ்தர்களை இருத்திவிட்டு எல்லோரும் எழும்பி நிற்கும் கலாசாரம் இப்போது வந்துள்ளது. இது தான் இந்த கட்சியின் ஜனநாயகம்” என்றும் ஆசாத் சாலி தெரிவித்தார்.