யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

🕔 August 16, 2019

– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது.

இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், அமைச்சர் றிஷாட் பதியுதீன் கீழுள்ள நீண்ட கால இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றும் அமைச்சு நிதிகளையும் ஒதுக்கவுள்ளது.

சொந்த இடங்களில் மீளக் குடியேற விருப்புடைய இம்மக்கள் அடிக்கடி பதிவுகளை மேற்கொண்ட போதிலும் அரச காணிகள் கிடைக்காததால், அலைக்கழிவது குறித்தும் அமைச்சர் றிஷாட் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு, முஸ்லிம்களை மீள் குடியேற்றத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அங்கீகாரம் வழங்கியது.

இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் மஹம்மதிய்யா பள்ளிவாசலுக்குச் சென்ற பிரதமர், மீள்குடியேறவுள்ள முஸ்லிம்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

“அமைச்சர் றிஷாட் பதியுதீன் அடிக்கடி  யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை என்னிடம் எடுத்துரைப்பார். இம்மக்களின் பூர்வீகம் பற்றியும் எனக்குத் தெரியும். உங்களை நேரில் சந்தித்தும் பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன். உரிய காணிகள் பெறப்பட்டதும் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமாகுமென்றும்” என்று இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாட்பதியுதீன், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மக்கள் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் நிலாம், அமைச்சரின் இணைப்பாளர் சுபியான், பள்ளிவாசல் இமாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்