கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து
– அஸ்லம் எஸ்.மௌலானா –
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில், சட்டவிரோத கட்டிடம் எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக கல்முனை மாநகர சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக அந்த அமர்வு இடைநடுவில் முடிவுறுத்தப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது வழமையான சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நிலையியல் குழுக்களின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அங்கீகரித்தல், குப்பை அகற்றலுக்கான வாகனக் கொள்வனவு, மாதாந்த கணக்கறிக்கை, அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத் தயாரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.
இதன் தொடராக ஒலுவில் துறைமுக சர்ச்சையினால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, சில முன்மொழிவுகளை ஆராய்வதற்கு முதல்வர் அறிவிப்பு செய்தவேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ராஜன் எழுந்து, கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில் நிர்மாணத்துக்கு எதிராக, கல்முனை நீதிமன்றத்தில் எமது கல்முனை மாநகர சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், தனது கண்டனத்தையும் ஆட்சேபனையையும் தெரிவித்து உரையைத் தொடர முற்பட்டார்.
இதன்போது குறுக்கிட்ட முதல்வர்; “இவ்விடயம் நீதிமன்றத்தில் உள்ள ஒரு விவகாரம் என்பதால் இது குறித்து இந்த சபையில் பேச முடியாது. அவ்வாறு பேசினால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாவோம். அதனால் இவ்விடயம் பற்றி இந்த சபையில் பேச அனுமதிக்க மாட்டேன். சபை அமர்வு நிறைவுற்ற பின்னர் அது தொடர்பில் நாம் கலந்துரையாடலாம்” என தெரிவித்ததுடன், உறுப்பினர் ராஜனை ஆசனத்தில் அமருமாறும் பணித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் எழுந்து நின்று முதல்வருடன் தர்க்கத்தல் ஈடுபட்டனர். இதன்போது முதல்வருக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் மிகக் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.
உங்களது இந்த இனவாத செயற்பாடு தமிழ்- முஸ்லிம் சமூகங்களிடையே இன முறுகலை ஏற்படுத்தும் என, கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன், முதலவரை நோக்கித் தெரிவித்தார். இன முறுகலை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை யார் யார் முன்னெடுக்கின்றனர் என்பதும் அதில் உங்களது வகிபாகம் என்னவென்றும் மக்களுக்குத் தெரியும் என, பதிலுக்கு முதல்வர் காட்டமாகக் கூறினார்.
இதன்போது பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சபையை தொடர்ந்தும் சுமுகமாக கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்குமாறும் உறுப்பினர்கள் அனைவரும் அமைதி பேணுமாறும் சபை ஒழுக்கத்தை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்ட முதல்வர், சபை ஒழுங்கை மீறி, சபையைக் குழப்ப முற்படும் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்படுவதுடன் அவர்களை ஒரு மாத காலம் இடைநிறுத்தம் செய்வேன் என்றும் எச்சரித்தார்.
எனினும் கூச்சல், குழப்பம் தொடரவே, சபையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று பல தடவைகள் அறிவுறுத்திய முதல்வர், சபை தொடர்ந்தும் அல்லோலகல்லப்பட்டதால் மாலை 5.00 மணியளவில் சபை அமர்வை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்த முதல்வர், அக்கிராசனத்தில் இருந்து எழுந்து சென்றார்.