தலைப்புச் செய்திகள்

திகன கலவரத்தின் பின்னணியில் பொலிஸார்: நாமல் சந்தேகம்

திகன கலவரத்தின் பின்னனியில் நல்லாட்சியும் நல்லாட்சி பொலிஸாரும் இருந்துள்ளனர் என்கிற சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, அதற்கான தனி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நாமல், இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இன்று நல்லாட்சியின் அடியாட்களாக பொலிஸார் மாறியுள்ளனர். ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் குடுப்ப உறுப்பினர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரதி பொலிஸ் மாஅதிபர் தொடர்பான விடயம் தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

இந்த பாரதூரமான விடயம் அம்பலமான பின்னர் அதனை ஒரு பொருட்டாக இந்த அரசாங்கமோ பொலிஸ் திணைக்களமோ எடுக்கவில்லை. நாம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சம்பவத்துடன் தொடர்புடைய பிரதி பொலிஸ் மா அதிபர் கட்டாய விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டுள்ளார்.

நாம் அழுத்தம் கொடுத்திருக்காவிட்டால் இந்த விடயத்தையும் அரசாங்கம் மூடி மறைத்திருக்கும்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தவிர, திகன கலவரம் தொடர்பிலும் பல்வேறுபட்ட தகவல்களை நாமல் குமார வெளியிட்டுள்ளார்.

கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்த பொலிஸாரே கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

திகன கலவரத்தின் பின்னனியில் இந்த அரசாங்கமும் பொலிஸாரும் இருந்துள்ளனர் என்ற சந்தேகம் இன்று மேலும் வலுவடைந்துள்ளது.

அளுத்கமை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்துவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற சிறு சம்பவங்களுக்கும் விசாரணை ஆணைக்குழுக்களை அமைத்து, வைத்து எம்மை பழிவாங்குகிறது.

அதே அசாங்கம், திகன கலவரம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை வைக்க வேண்டும். இல்லை என்றால் அந்த கலவரத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)