பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது

🕔 April 27, 2018

– புதிது ஆசிரியர் பீடம் –

திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளைக் கண்டிப்பதாகக் கூறி, முஸ்லிம் அரசியல்வாதிகள் பத்தாம்பசலித்தனமாக விடுகின்ற அறிக்கைகளையும், எழுதும் கடிதங்களையும் ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் வெளியிடாது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய உடையினை உடுத்துவதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள போதும், அது குறித்து உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதற்கு, முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் இதுவரை முயற்சிக்கவில்லை என்பதும், அவர்களின் கள்ள மௌனமும் ஏமாற்றமளிக்கிறது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வாறு உருப்படியாக எதையாவது செய்திருந்தால், சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்காது. அல்லது, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆக, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துப்பற்ற முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கைகளை விடுவதும் கடிதங்களை எழுதுவதும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் செயற்பாடுகளாகும்.

இதற்கு ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் துணைபோகாது.

Comments