ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது

🕔 April 5, 2018

டகவியலாளர் கீத் நொயார் 2008ஆம் ஆண்டு கடத்தித் தாக்கப்பட்டமை தொடர்பில், ராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

ஆங்கில வாரப் பத்திரிகையொன்றின் பிரதி ஆசிரியரான நொயார் 22 மே 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு, மறுநாள் அவரின் வீட்டுக்கு அருகில் விட்டுச் செல்லப்பட்டிருந்தார். இதன்போது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமைக்கு உடந்தையாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அமல் கருணாசேகர கைதாகியுள்ளார்.

ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

இது தொடர்பாக கல்கிசை நீதிமன்ற நீதவானுக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி, தாக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே, ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, ராணுவ பிரதானி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்