அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை

🕔 May 5, 2024

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், அந்த இடத்தில் – திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்தியக் கிளையொன்றினை அமைப்பதற்கு உதவுமாறு, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.எம். ஹனீஸ், முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அட்டாளைச்சேனை – சம்புக்களப்பு வீதிக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை உத்தியோபூர்மாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு – நேற்று (04) அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியில் – சம்புக்களப்பு வீதிக்கு மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டு, நிகழ்வு தொடர்பான பதாகையை சம்பிரதாபூர்வமாக திரைநீக்கம் செய்தார். இதனையடுத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றும் பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றியபோதே, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹனீஸ், மேற்படி வேண்டுகோளை முன்வைத்தார்.

இது தொடர்பில் எழுத்துமூல வேண்டுகோளை அட்டாளைச்சேனை பெரியபள்ளிவாசல் மற்றும் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றின் ஊடாக, முன்னாள் அமைச்சர் அமைச்சர் அதாஉல்லாவிடம் கையளிக்கவுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பெரியபள்ளிவாசல் தலைவர் ஹனீஸ் கூறினார்.

மேற்படி நிகழ்வில் உரையாற்றிய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லா; தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்மாணத்தில் தனது பங்களிப்பை நினைவுபடுத்தியதோடு, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நல்லவற்றைச் செய்வதற்கு – தான் அதிக விருப்புடன் உள்ளதாக கூறினார்.

மேலும், அட்டாளைச்சேனைக்கு அதிக அபிவிருத்திகளை செய்த அரசியல்வாதியென்றால் அது – தான்தான் எனக் கூறிய அதாஉல்லா; அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரின் வேண்டுகோளை கவனத்திற் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா முஸாபிர், உதவி பிரதேச செயலாளர் வை. ராசித் யஹ்யா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்ஐ.எம். ஹசீப், அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி யூ.எல். நியாஸ், இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எஸ். சிஹாபுத்தீன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், அமைச்சரின் அமைப்பாளர்களான ஆசிரியர் எம்.ஐ.எம். பாயிஸ், ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர் ஏ.பி.ஏ. கபூர், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தருமான எஸ்.எம். இமாமுதீன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்ட சிலர் – பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்