நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

🕔 April 1, 2018

க்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்களாயின், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என, அந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால், ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னர் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்தித்தாக இதன் போது கூறிய அமைச்சர், அவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன கட்சிக்குத் தாவுவதற்கு உள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஏதாவதொரு காரணம் தேவையாக உள்ளது. இந்த நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments