முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை

🕔 March 14, 2018

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஹரீஸுக்கும் இடையில் இன்னுமொரு குடுமிச் சண்டை ஆரம்பித்திருக்கிறது.

அதனால், ஹரீஸுக்கு எதிராக தனது வழமையான பாணியில் மு.கா. தலைவர் ஹக்கீம், குழி வெட்டத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று மு.காங்கிரசின் உயர் பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரும் இன்றும் சிலரும் சேர்ந்து, ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கொண்டு வந்த பிரேரணையானது, மு.கா. தலைவர் வெட்டிய குழிதான் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத ‘சாம்பிராணிகள்’ அரசியல் களத்தில் யாரும் இருக்க முடியாது.

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசனலி போன்றோருக்கு எதிராகவும், மு.கா. தலைவர் ஹக்கீம் – தனது அல்லக்கைகளை வைத்து, உயர் பீடக் கூட்டங்களில் கோசமிட வைத்து, பிரேரணைகள் கொண்டு வந்து, இப்படித்தான் காரியங்களைச் சாதித்தார்.

அதைத்தான் ஹரீஸ் விடயத்திலும் ஹக்கீம் செய்து பார்த்தார். ஆனால், சற்று சறுகி விட்டது.

மு.காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தை ரஊப் ஹக்கீமும், அவரின் குடும்பத்தாரும், அடிவருடிகளும் சேர்ந்து விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் ஹக்கீமை பலரும் தமது எழுத்துக்களில் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக, ஹக்கீமுடன் முரண்படும் அல்லது ஹக்கீம் குழி வெட்ட நினைக்கின்ற எல்லோரையும் தியாகிகளாக போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்க முடியாது.

பிரதியமைச்சர் ஹரீஸையும் இந்த இடத்தில் வைத்தே, பேச வேண்டியுள்ளது.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில், பிரதியமைச்சர் ஹரீஸ் மிகவும் செயற் திறனற்றவர். நாடாளுமன்ற சபை அமர்வுகளில் அதிகம் கலந்து கொள்ளாதவர்களில் பிரதியமைச்சர் ஹரீஸும் ஒருவராவார். அவருக்கு வாக்களித்த மக்களை அவர் சந்திப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு அதிகம் உள்ளது. அவரை தொலைபேசி வழியாகவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அதிகமான நேரங்களில் அவரின் தொலைபேசி, ‘ஒஃப்’ செய்யப்பட்டே இருக்கும். இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஹரீஸ் மீது உள்ளன.

இந்த நிலையில்தான், ஹரீஸுக்கு எதிராக மு.கா. தலைவர் ஹக்கீமுடைய வாள் உயர்ந்திருக்கிறது. அதற்காக, ஹரீஸை முஸ்லிம் காங்கிரசின் ‘புரட்சித் தலைவன்’ என்றெல்லாம் சொல்லி ‘காமடி’ பண்ண முடியாது.

ஹரீஸுக்கும், ஹக்கீமுக்கும் இடையில் இப்போது ஏற்பட்டுள்ள குடுமிச் சண்டை, கொள்கை முரண்பாடுகளால் ஏற்பட்டதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்தல் அவசியமாகும். இந்தப் பிரச்சினையானது, சமூக நலனை முன்னிறுத்தியதும் அல்ல.

அம்பாறையில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இடங்களை பிரதமர் பார்வையிடச் செல்லாமல், ஒலுவிலுக்கு வந்து போனமைக்காக, பிரதமர் ரணிலை ஊடகங்களின் முன்னிலையிலும், நாடாளுமன்றிலும் திட்டாத குறையாக ஹரீஸ் பேசி விட்டார். அதனால்தான், ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டது என்பதெல்லாம் நம்பும் படியாக இல்லை.

உண்மையில், அதற்காக ஹரீஸ் திட்ட வேண்டுமாயின், மு.கா. தலைவரைத்தான் முதலில் திட்டியிருக்க வேண்டும். ஏனென்றால், “பிரதமரை அழைத்துக் கொண்டு அம்பாறை செல்லவுள்ளேன்” என்று, ஹக்கீம்தான் கூறியிருந்தார். எனவே, “அம்பாறைக்கு பிரமரை ஏன் கூட்டிச் செல்லவில்லை” என்று, ஹக்கீமைத்தான் ஹரீஸ் திட்டியிருக்க வேண்டும். மாறாக, “பிரமர் தைரியமற்றவர், தயாகமகேயின் அழுத்தங்களுக்குப் பயந்து கொண்டு, அம்பாறைக்குச் செல்லவில்லை” என்று, ரணில் விக்ரமசிங்கவை ஹரீஸ் திட்டிமையானது, ஹக்கீமைக் காப்பாற்றும் எத்தனமாகும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்தல் வேண்டும்.

ஹக்கீமுக்கும் ஹரீஸுக்கும் இடையில், சாய்ந்தமருது விவகாரம் ஆரம்பித்ததில் இருந்து, ஒரு வகையான புகைச்சல் இருந்து வருகிறது. “சாய்ந்தமருது பிரச்சினை இந்தளவு விஷ்வரூபம் எடுப்பதற்கு ஹரீஸ்தான் காரணம்” என்று, ஒரு கட்டத்தில் ஹக்கீம் கூறியதாகவும் பேசப்பட்டது. இந்தப் புகைச்சல்தான் இப்போது எரியத் தொடங்கியிருக்கிறது.

மு.காங்கிரசின் தலைமைத்துவதற்கு சவாலாக ஹரீஸ் வந்து விடுவார் என்கிற பயத்தில்தான், ஹரீஸுக்கு எதிராக ஹக்கீம் குழி வெட்டத் தொடங்கியிருக்கிறார் என்கிற எழுத்துக்கள் மிகவும் கோமாளித்தனமாவை ஆகும்.  இரண்டு மூன்று திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் சந்தானம் – கதாநாயகனாக நடித்து விட்டார் என்பதற்காக, அவரைப் பார்த்து ரஜினிகாந்த் பயப்படுகிறார் என்று சொல்வதெல்லாம் எத்துணை அபத்தமோ, அது போலதான் – ஹரீஸைக் கண்டு ஹக்கீம் அச்சப்படுகிறார் என்று சொல்வதுமாகும்.

மேலும், இந்தப் பிரச்சினையின் ஒரு கட்டத்தில், மு.கா. தலைவருக்கு எதிராக பிரதியமைச்சர் ஹரீஸ், ஒரு புலி போல் சிலுப்பிக் கொண்டு நிற்பார் என்றெல்லாம் எவரும், அதிக பிரசங்கித்தனமாக கற்பனை பண்ணவும் தேவையில்லை.

சிலவேளை நாம் இதனை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட, மு.கா. தலைவரின் வீட்டில், “லீடர்” என்று அழைத்துக் கொண்டு, பிரதியமைச்சர் ஹரீஸ் நின்று கொண்டிருக்கக் கூடும்.

ஹக்கீமுக்கும் ஹரீஸுக்கும் இடையிலான முரண்பாடானது, முஸ்லிம் சமூகத்தை முன்னிறுத்தியதொன்றல்ல என்பதை, உறுதியாக நம்புகின்றமையினால்தான் இப்படிச் சொல்ல முடிகிறது.

இரண்டு ஓநாய்கள் சண்டையிடுவது – தங்களில் யார் முந்திக் கொண்டு, ஒரு முயலை வேட்டையாடுவது என்பதற்காகவே இருக்கும்.

மாறாக, ஒரு முயலைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு ஓநாய்கள் ஒருபோதும் சண்டை இடுவதில்லை.

கட்டுரையைப் புரிந்து கொள்வதற்கான செய்தி: பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுகாற்று முயற்சி: நடந்தது என்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்