தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்

🕔 February 5, 2018
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பதவியை, நான் மீளப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாற்றுக் கட்சியினர் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரின் அபிவிருத்தியினால்  ஏற்பட்ட பீதியில் சொல்லப்படுகின்ற இந்தப் புரளிகள் உண்மைக்குப் புறம்பானது. தேசியப்பட்டில் கேட்டுக்கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு கொடுத்த தேசியப்பட்டிலை பறித்து, எப்படி ஒரு ஊருக்கு மாத்திரம் கொடுக்கமுடியும் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிண்ணியா நகரசபை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

“திருகோணமலையில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுறுசுறுப்பாக இயங்குகின்றவராக எமது கட்சியைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக் இருக்கிறார். எனது அமைச்சு மாத்திரமின்றி, எல்லோருடைய அமைச்சில் இருந்தும் நிதியொதுக்கீடுகளை பெற்றுக்கொண்டு வருகின்ற திறமை தௌபீக் எம்.பி.க்கு இருக்கிறது. இப்படி அவர் செய்கின்ற வேலைகளுக்கு தனது பெயரைப் போடுகின்ற வேலையைத்தான் இங்குள்ள மயில் எம்.பி. செய்துகொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் அந்தளவுக்கு குறுகியுள்ளது.

தௌபீக் எம்.பி.யின் இப்படியான செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், 15ஆம் திகதி அவருடைய தேசியப்பட்டியல் ஆசனத்தை நான் பறிக்கப்போவதாக புரளிகளை சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இதைச் சொல்லி கிண்ணியா மக்களை குழப்புகின்ற அளவுக்கு தௌபீக் எம்.பி.யின் சேவைக்கு கிராக்கி என்பதை மாற்றுக்கட்சினர் உணர்ந்திருக்கிறார்கள். இவர்களின் பித்தலாட்டக் கதைகளுக்கு யாரும் சோரம்போக வேண்டியதில்லை.

நாங்கள் திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் கொடுத்ததை நியாயப்படுத்துகின்ற செய்தியாக இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அமையும். கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை இரண்டையும் நாங்கள் கைப்பற்றுவோம். கிண்ணியாவிலுள்ள கட்சியின் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்களும் இதற்கு சான்று பகர்வார்கள். மற்றவர்கள்போல நாங்கள் பஸ் பிடித்து இங்கு ஆட்களை கூட்டத்துக்கு கொண்டுவரவில்லை.

இதுதவிர, மூதூர், குச்சவெளி என்று எல்லா இடங்களிலும் மக்கள் அலை முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் திரண்டுவந்துகொண்டிருக்கிறது. மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் இப்போது எங்களுக்கு கிடைத்திருக்கிறார். அடுத்த மாகாணசபை தேர்தலில் அதைவிட பெரிய அந்தஸ்தில் வைப்பதற்கு கிண்ணியா மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக மாற்றுக் கட்சியினர் பேசிக்கொண்டு திரிகின்றனர். தற்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாததும், தமிழர்களின் 70 வருட கோரிக்கைக்கும் குறுக்கே நிற்கின்ற தேவை முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லை. இப்போது நடக்காத ஒன்றுக்காக, மற்றவர்கள் செய்வதுபோல தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த வேண்டிய தேவை எங்களுக்கில்லை.

இந்த தேர்தல் முடிவானது, முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசிய ரீதியாக இருக்கின்ற அந்தஸ்தையும், அதன் பேரம்பேசும் சக்தியையும் தீர்மானிக்கின்ற வகையில் அமையவேண்டும். சர்வதேச ரீதியாக, இலங்கை முஸ்லிம்களின் பேச்சாளன் என்ற அந்தஸ்தை முஸ்லிம் காங்கிரசுக்கு மேலும் வழங்க வேண்டும்” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்