பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு

🕔 January 27, 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

பின்னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கை கோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்;

“இன்று நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. அசிரி விலை, பருப்பு விலை சீனி விலை என, அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

மண் விலையும் அதிகரித்துள்ளது.

எங்கள் மீது பொய்யான பிரச்சாரங்களை கூறி ஆட்சியைப் பிடித்தார்கள். இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டவர்கள் நாங்கள்தான்.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் நாம் பட்ட துன்பங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது மார்க்க கடமைகளை கூட பாதுகாப்போடுதான் செய்ய வேண்டியிருந்தது.

இந்த சூழ்நிலையில்தான் சுனாமி அனர்த்தமும் இந்த பிரதேசத்தில் ஏற்பட்டது. யுத்தத்தின் அழிவகளையும் சுனாமி அனர்தத்தின் அழிவுகளையும் நாம் புனரமைப்பு செய்து, இந்த நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற் கொண்டோம். பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.

இன்று பல்கலைக்கழகத்திற்கு அச்சமில்லாமல் சென்று வரக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய அரசாங்கம் எதை செய்துள்ளது. நாங்கள் வீதிகளை செப்பனிட்டோம், அபிவிருத்தி செய்தோம், நீர் விநியோகத்தினை மேற்கொண்டோம். மின்சாரத்தினை வழங்கினோம்.

இந்த நிலையில்தான் எங்கள் மீது தடை ஏற்பட்டது. மூன்று வருடங்களாக எந்த அபிவிருத்தியுமில்லாத மந்த கதியில் நாடு காணப்படுகின்றது.

உலகத்தில் எங்கும் இடம் பெறாத பாரிய கொள்ளை – இலங்கை மத்திய வங்கியில் இடம் பெற்ற கொள்ளையாகும். அரசாங்கம் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில்தான் ஈடுபட்டு வருகின்றது.

இதனால் நாட்டு மக்கள் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் நாட்டில் பொருட்களின் விலையுயர்வு ஏற்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்கள் இல்லை. இதனால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளன. மக்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.உலகிலேயே முன்னேற்றமான நாடாக இலங்கை காணப்பட்டது. ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை பின்னடைவை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஒருவொருக்கொருவர் கை கோர்த்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. பேருவலை பிரதேசத்தில் இடம் பெற்ற பிரச்சினையை எங்கள் மீது – சேறு பூசி, இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை எடுத்துக் கொண்டு சுகபோகங்களை சிலர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்கள் மீதான சதித்திட்டத்தினை அமைச்சர் ஒருவர் அரங்கேற்றும் கலந்துரையாடல் வீடியோ காட்சி யொன்றை, இனைய தளமொன்றில் நான் பார்வையிட்டேன்.

அன்று பள்ளிவாயல் மீது ஒரு சம்பவம் இடம் பெற்ற போது, நாட்டின் ஜனாதிபதியான நான் நாட்டில் இருக்க வில்லை. பாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இருக்க வில்லை. நாட்டுக்கு வந்தவுடன் உடனடியாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் நஸ்ட்ட ஈடு கொடுத்ததுடன், அங்கு அழிக்கப்பட்ட வீடுகளையும் புனரமைப்பு செய்து கொடுத்ததுடன் பள்ளிவாயலையும் சிறப்பாக புனரமைப்பு செய்தோம்.

அன்மையில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஜிந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இடம்பெற்றது. இந்த நல்லாட்சி அரசாங்கம் என்ன நஸ்ட்ட ஈடு கொடுத்தார்கள். ஒரு சதமேனும் கொடுக்க வில்லை. இதுவரைக்கும் அவர்கள் அமைதி காக்கின்றார்கள்.

எனவே இந்த நிலையில் எங்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு என்றுமிருப்போம். உங்களுக்கு உதவுவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்