சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு

🕔 January 27, 2018

– மப்றூக் –

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை கலைக்கப்பட்டு, விசேட நிருவாக சபை அமைக்கப்பட்டமை தவறான செயற்பாடு என, வக்பு சபையின் தீர்ப்பாயம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

அதேவேளை, முன்னைய சபையினர் தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபையை வக்பு சபையினர் கலைத்து விட்டு, புதிய நிருவாக சபையொன்றினை அமைத்தமைக்கு எதிராக, கலைக்கப்பட்ட நிருவாக சபையினர் – வக்பு சபையின் தீர்பாயத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேன்முறையீடு தொடர்பில் வக்பு சபையின் தீர்ப்பாயம், இன்று ஆராய்ந்து வழங்கிய தீர்ப்பிலேயே, இந்த உத்தரவுகளை வழங்கியது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு செய்திருந்தது.

எனவே, இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கடந்த 06ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்தார்.

இதனையடுத்து, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு, வக்பு சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தரவிட்டது.

இதற்கு அமையவே, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விட்டு, நான்கு பேரைக் கொண்ட புதிய நிருவாகத்தை நியமிப்பதாக கடந்த 09ஆம் திகதி வக்பு சபை தீர்மானித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்